எருமை மாடு முட்டி இழுத்து செல்லப்பட்ட பெண் - உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு
- எருமை மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மாடுகளை சாலையில் திரிய விடக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது.
திருவொற்றியூர் சோமசுந்தர் நகரைச் சேர்ந்தவர் மதுமதி (38). இவர் அதே பகுதியில் உள்ள தனது நாத்தனார் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த எருமை மாடு அவரை முட்டியுள்ளது. இதில் அவரது ஆடை மாட்டின் கொம்பில் சிக்கிக்கொண்டது. அந்த பெண்ணை எருமை மாடு அந்தரத்தில் தூக்கி சுற்றியது.
மேலும், மாடு மதுமதியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று தள்ளியது. இதில் அவர் படுகாயமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். படுகாயம் அடைந்த மதுமதிக்கு மருத்துவர்கள் 40 தையல் போட்டுள்ளதாக தகவல் வெளியுள்ளது. மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் பெண்ணை முட்டிய எருமை பிடிக்க தீவிர காட்டி வந்தனர். அதை தொடர்ந்து எருமை மாட்டை பிடித்தனர். எருமை மாடு குறித்து இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.
எருமை மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையின் மாட்டின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "திருவொற்றியூர் பகுதியில் பெரும்பாலானோர் மாடு வளர்க்கின்றனர். அவர்களுக்கு மாடுகளை சாலையில் திரிய விடக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பிலும், சாலையில் சுற்றும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து வருகிறோம். இந்த சம்பவத்தில் தொடர்புடயை மாட்டை பிடித்துவிட்டோம். அதை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவத்தில் பராமரித்து வருகிறோம். அதன் உரிமையாளரை தேடி வருகிறோம். இச்சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.