- சரனிதாவுக்கு அவரது கணவர் போன் செய்தபோது நீண்ட நேரம் எடுக்கவில்லை.
- விடுதியில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார், இவர் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார். இவருக்கு சரனிதா (32) என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர்.
சரனிதா அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி. இறுதி ஆண்டு படிப்பை முடித்து உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் பயிற்சி டாக்டராக பணிக்கு வந்து இருந்தார். இதனால் சரனிதா விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சரனிதாவுக்கு அவரது கணவர் போன் செய்தபோது நீண்ட நேரம் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் சென்னையில் உள்ள உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து விடுதி அறைக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார். அங்கு அவர் சென்ற போது சரனிதா தங்கி இருந்து அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து விடுதி நிர்வாகி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது லேப்-டாப் வயரை கையில் பிடித்த நிலையில் சரனிதா தரையில் இறந்து கிடந்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரனிதா கையில் சார்ஜரை பிடித்தபடியே உயிரிழந்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்னர் விடுதியில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவரான சரனிதா, கொரோனா காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிரமாக பணியாற்றி மருத்துவ சேவையாற்றியவர். எனவே, பெண் மருத்துவர் சரனிதா உயிரிழந்த சம்பவம் மருத்துவ உலகிற்கும், அவரது குடும்பத்தாருக்கும் பெரும் இழப்பு என்றே கூற வேண்டும்.