தமிழ்நாடு

மங்கலம்பேட்டை அருகே காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

Published On 2024-07-20 09:45 GMT   |   Update On 2024-07-20 09:45 GMT
  • 2 நாளைக்கு ஒருமுறை 5, 6 குடங்கள் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
  • போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மங்கலம்பேட்டை:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எம்.அகரம் ஊராட்சியின் புதுக் காலனி மற்றும் பழைய காலனியில் சுமார் 160-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனார்.

இங்கு குடிநீர் பற்றாக்குறை பிரச்சனை இருந்து வருவதாகவும், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் ஒரே ஒரு வேளை மட்டும்தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும், 2 நாளைக்கு ஒருமுறை 5, 6 குடங்கள் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிகிறது.

இதனால் பாட்டில் மற்றும் கேன்களில் அடைத்து விற்கக்கூடிய குடிநீரை காசு கொடுத்து வாங்கி அக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் எம். அகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தின் முன் கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லாஹ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருஞானம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News