தமிழ்நாடு (Tamil Nadu)

தர்மபுரியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2023-07-24 04:36 GMT   |   Update On 2023-07-24 06:27 GMT
  • முதல்கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
  • முகாமை தொடங்கி வைத்து பயனாளியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

தர்மபுரி:

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்" என்று பெயரிடப்பட்டது.

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு இந்த திட்டத்தின்கீழ் பயன் பெறத்தகுதியானவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

இந்த திட்டம் மூலம் முதல் கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அதில் "தமிழக வரலாற்றில் மாபெரும் திட்டமாக அமையப் போகும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது" என்று மாவட்ட கலெக்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்து வருகின்றனர். விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக விண்ணப்பங்கள் விநியோகம் செய்வது பெரும்பாலான இடங்களில் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. நேற்று மாலை வரை தமிழகம் முழுவதும் சுமார் 91 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் இந்த மாதமும், அடுத்த மாதமும் 3 கட்டங்களாக நடைபெற உள்ளன.

முதல் கட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சுமார் 21 ஆயிரம் முகாம்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த 21 ஆயிரம் முகாம்களிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது.

இந்த முகாம்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை (திங்கட்கிழமை) தொடங்கி வைத்தார். இதற்காக தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் பணியைத் தொடங்கி வைத்தார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையம் சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு சென்றார்.

அங்கு காலை 9.45 மணியளவில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் பணியை தொடங்கி வைத்து மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் சிலருடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்குச் சென்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து உரையாற்றினார். பின்னர் சாலை மார்க்கமாக சேலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி செல்வதை முன்னிட்டு மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமையில் 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 6 கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 9 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மற்றும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News