தமிழ்நாடு (Tamil Nadu)

மகளிர் உரிமைத்தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை

Published On 2023-08-12 06:19 GMT   |   Update On 2023-08-12 10:28 GMT
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
  • இரண்டாம் கட்ட முகாம்களின் இறுதி இரண்டு நாட்கள் (15.8.2023, 16.8.2023) நடைபெறும்.

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை நடத்தினார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மாதம் ஒரு கோடி பெண்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டுக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, மூன்று கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக இதுவரை 1 கோடியே 48 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும், செயல்படுத்துவதற்கான பணிகள் குறித்தும், பயனாளர்களை முறையாக தேர்வு செய்வது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவான ஆலோசனை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.8.2023 மற்றும் 20.8.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட முகாம்கள் 5.8.2023 அன்று தொடங்கி 16.8.2023 வரை நடைபெற கால அட்டவணை வெளியிடப்பட்டது 15.8.2023 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதால், இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் பொருட்டு, இரண்டாம் கட்ட முகாம்களின் இறுதி இரண்டு நாட்கள் (15.8.2023, 16.8.2023) நடைபெறும்.

விடுபட்டவர்களுக்கான விண்ணப்பதிவு செய்யும் நிகழ்வை 19.8.2023 மற்றும் 20.8.2023-ந்தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களோடு இணைத்து நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களை முதல் கட்ட விண்ணப்ப பதிவு நடைபெற்ற இடங்கள் மற்றும் இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு நடை பெறும் இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் நடத்த வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் இதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, உதயநிதிஸ்டாலின், தலைமைச் செயலாளர், துறை செயலாளர் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News