தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் பெண்ணின் கண் அகற்றம்- அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் தர்ணா போராட்டம்

Published On 2023-01-04 08:31 GMT   |   Update On 2023-01-04 08:31 GMT
  • சத்யாவிற்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் செலுத்தப்பட்டது.
  • தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

சேலம்:

சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சத்யா (வயது 29). பட்டதாரியான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சத்யாவிற்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் செலுத்தப்பட்டது. அதன் பிறகு சத்யாவின் வலது கண்ணில் வீக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் 12-ந் தேதி சத்யாவின் தந்தை உள்பட சிலர், அரசு மருத்துவமனை டாக்டரை சந்தித்து, முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், அதனால் கண்ணில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் புகார் கூறினார். மேலும் டிஸ்சார்ஜ் செய்யுங்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் அவர்களை டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்யாமல் அங்கேயே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் 12-ந் தேதி சத்யா கண் பார்வை இழந்து விட்டதாக டாக்டர்களே உறவினர்களிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து 22-ந் தேதி தனியார் மருத்துவமனையில் சத்யா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து சத்யாவின் கண்ணை அகற்றியும் விட்டனர்.

இதனால் ஆவேசமடைந்த சத்யாவின் உறவினர்கள், தவறான சிகிச்சை செய்த டாக்டரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாட்டாண்மை கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குள் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் நுழைய முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் அனுமதிக்காததால் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News