பணகுடி அருகே வாலிபர் வெட்டிக்கொலை- 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
- கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ஜெபக்குமாரை அரிவாளால் வெட்ட பாய்ந்துள்ளது.
- ஜெபக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த பேரின்பராஜிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த யோக்கோபுரம் வடக்கு நெடுவிளை தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் செல்வன்(வயது 32). கட்டிட தொழிலாளி.
இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜெபக்குமாரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு அவர்கள் 2 பேரும் யாக்கோபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ஜெபக்குமாரை அரிவாளால் வெட்ட பாய்ந்துள்ளது.
உடனே ஜெபக்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது செல்வன் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டார். உடனே கும்பல் அவரது பின்பக்க தலையில் சரமாரியாக வெட்டியது. இதில் செல்வன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அஜிகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செல்வனை வெட்டிக்கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
ஜெபக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த பேரின்பராஜிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. அவர்கள் 2 பேரும் சமீபத்தில் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜெபக்குமாரை தீர்த்துக்கட்டுவதற்காக பேரின்பராஜ் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி நேற்று யாக்கோபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஜெபக்குமாரிடம் அந்த வழியாக வந்த அவரது நண்பரான செல்வன் பேசிக்கொண்டிருந்தார்.
அந்த நேரம் அங்கு வந்த பேரின்பராஜ் மற்றும் குமரி மாவட்டம் காவல்கிணறு மற்றும் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிகளை சேர்ந்த 5 பேர் சேர்ந்து ஜெபக்குமாரை வெட்ட முயன்றதும், அதில் அவர் ஓடிவிட்டதால் செல்வனை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பேரின்பராஜ், ஜெபக்குமார் ஆகியோருக்கு அஞ்சுகிராமம் உள்ளிட்ட போலீஸ்நிலையங்களில் அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் அஜிகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலையில் 2 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.