வெயிலை சமாளிக்க தலையில் தண்ணீர் ஊற்றியப்படி ஸ்கூட்டரை ஓட்டிய வாலிபர்- அபராதம் விதித்து எச்சரித்த போலீசார்
- வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார்.
- பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் உக்ரம் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் , பெரியகோவில் பகுதியில் கடும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் விதமாக வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார். இதை மற்றொரு வாலிபர் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்.
இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில், ஆபத்தை விளைவிக்கும் விதமாக வாகனத்தை ஓட்டியதாக, இருவர் குறித்து மேற்கு தஞ்சை போலீஸ் நிலையத்தினர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவினர் விசாரணை நடத்தினர்.
இதில், வாகனத்தை ஓட்டியவர் தஞ்சை கீழவாசல் குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த அருணாசலம் (வயது 23), இதை வீடியோ எடுத்தவர் குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரசன்னா (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அருணாசலம், பிரசன்னாவுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இருவரையும் இதுபோன்று பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.