ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகளின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை
- வெடிகுண்டுகளை மணலியில் ஒரு இடத்தில் பதுக்கி வைத்துவிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக கையில் எடுத்துச் சென்றுள்ளனர்.
- கொலையாளிகள் ரூ.5 லட்சம் வரை கூலியாக பெற்றிருந்தால் அவர்களது ரூ.10 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் புதிய சட்டம் வழிவகுக்கிறது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொன்னை பாலுவுடன் சேர்ந்து ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்குவதற்கும், தனது மகனான காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமனுடன் ஏற்பட்ட மோதலுக்கு முடிவு கட்டும் வகையிலும் வேலூர் சிறையில் இருந்து வடசென்னை தாதா நாகேந்திரன் இந்த கொலையில் உதவிகள் செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்தனர். பாஜக கட்சியில் சேர்ந்து பணியாற்றி வந்த பெண் தாதா அஞ்சலையும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இந்த வழக்கில் போலீசார் குற்ற பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர். கொலை வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரை தீர்த்து கட்டுவதற்காக கொலையாளிகள் எடுத்துச் சென்ற வெடி குண்டுகள் பலரது கைமாறி கொலையாளிகளின் கைக்கு சென்றிருப்பது தெரிய வந்து உள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொல்வதற்கு முடிவு செய்த பொன்னை பாலுவும் அவரது கூட்டாளிகளும் தேவைப்பட்டால் வெடி குண்டுகளை பயன்படுத்த வேண்டும் என்று கையில் எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் அதனை பயன்படுத்துவதற்கான தேவை எழவில்லை. அரிவாளாலேயே ஆம்ஸ்ட்ராங்கை அவர்கள் வெட்டிக்கொன்று விட்டனர்.
இந்த நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்த இரண்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி கொலை வழக்கில் சிக்கிய ஆதாரங்களாக சேர்த்து உள்ளனர். அந்த வெடிகுண்டுகள் சம்பவ செந்தில் மூலமாக தயார் செய்யப்பட்டு பொன்னை பாலுவிடம் வழங்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கோடம்பாக்கத்தில் இருந்து 2 வெடிகுண்டுகளை எடுத்துக் கொண்டு அதனை சாப்பாட்டு பாத்திரத்தில் வைத்து மாநகராட்சி ஊழியர்கள் போல உடை அணிந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளனர். அவர்களை ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் முதலில் திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லி உள்ளனர். அங்கு வைத்து வெடிகுண்டுகளை வாங்கிக் கொண்டு 2 பேர் ஐகோர்ட்டு அருகில் சென்று இந்த 2 வெடிகுண்டுகளையும் கைமாற்றி உள்ளனர்.
இந்த வெடிகுண்டுகளை மணலியில் ஒரு இடத்தில் பதுக்கி வைத்துவிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக கையில் எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள 'பி.என்.எஸ்.107' சட்ட பிரிவின் கீழ் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத் துறைக்கு மட்டுமே இருந்து வந்த இந்த அதிகாரம் புதிய சட்டப்பிரிவின் கீழ் போலீசாருக்கும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி சென்னை மாநகர போலீசார் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளனர்.
இதுபோன்ற கொலை வழக்குகளில் கொலையாளிகள் ரூ.5 லட்சம் வரை கூலியாக பெற்றிருந்தால் அவர்களது ரூ.10 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் புதிய சட்டம் வழிவகுக்கிறது.
இதன்படி சென்னை மாநகர காவல் துறையினர் முதல் நடவடிக்கையாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.