தமிழ்நாடு

சென்னை, பொள்ளாச்சி, மதுரையில் பலூன் திருவிழா- சுற்றுலாத்துறை ஏற்பாடு

Published On 2024-11-12 02:53 GMT   |   Update On 2024-11-12 02:53 GMT
  • பிறமாநில சுற்றுலா பயணிகளை பொறுத்தவரை மதுரைக்கு அதிகம் பேர் வருகின்றனர்.
  • சுற்றுலாத்துறை அங்கு மாதம் தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு வருகிறது.

சென்னை:

இந்தியாவில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. வெளிநாட்டு பயணிகளை பொறுத்தவரை தஞ்சை பெரிய கோவிலுக்கு அதிகம் பேர் வருகின்றனர். பிறமாநில சுற்றுலா பயணிகளை பொறுத்தவரை மதுரைக்கு அதிகம் பேர் வருகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றூலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் சுற்றுலாத்துறை, சுற்றுலாக்களை திட்டமிட்டு வருகிறது.

மதுரையை பொறுத்தவரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் ஜல்லிக்கட்டு தான் உலக பிரசித்தி. எனவே அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது வெளிநாடு சுற்றுலா பயணிகளை, சுற்றுலாத்துறை அழைத்து வருகிறது. அங்கு தற்போது அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் சுமார் ரூ.45 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. மற்ற மாதங்கள் முழுவதும் அந்த மைதானத்தில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை.

எனவே சுற்றுலாத்துறை அங்கு மாதம் தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்கு பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. அதற்கு தமிழக அரசும் அனுமதி தந்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உண்டு. கடந்த 2015-ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்கு சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு நடந்த பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கு கொண்டன.

அடுத்த ஆண்டு (2025) தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி முதல் 19-ந்தேதி சென்னை, கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. சென்னையில் எங்கு நடைபெறும் என்பது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் எப்போது பலூன் திருவிழா நடைபெறும் தேதியை அதிகாரபூர்வமாக தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பலூன் திருவிழாவிற்கான டீசரும் https://youtu.be/Bu2p8YVN3gQ வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News