மதுரையில் புல்லட் பேரணி- வி.சி.க.வினர் மீது வழக்குப்பதிவு
- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
- பேரணி மதுரை ராஜா முத்தையா மன்றம் முன்பிருந்து காந்தி மியூசியம் வரை நடைபெற்றது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாச்சாமி என்ற பட்டியலின கல்லூரி மாணவர் புல்லட் ஒட்டியதால் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த வாலிபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அரிவாள் வெட்டில் கை துண்டிக்கப்பட்ட அந்த மாணவர் சிகிச்சைக்கு பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் 3 பேரை கைது செய்தனர். இந்தநிலையில் புல்லட் ஓட்டியதால் பட்டியலின மாணவர் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று புல்லட் பேரணி நடை பெற்றது.
கோர்ட்டு அனுமதி பெற்று தொடங்கிய இந்த பேரணி மதுரை ராஜா முத்தையா மன்றம் முன்பிருந்து காந்தி மியூசியம் வரை நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்றார்.
இந்த பேரணியில் கலந்து கொண்ட 170 பேர் மீது தல்லாகுளம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பெண்கள் உள்ளிட்ட 170 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.