மூத்த குடிமக்களை பாதுகாக்க கோரி வழக்கு: அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
- மூத்த குடிமக்கள் நலனை தினசரி பராமரித்து உயர் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
- தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை.
மதுரை:
மதுரை புதுமாகாளிபட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த வக்கீல் மணிபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தற்போது பெரும்பாலான மூத்த குடிமக்கள், பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளால் எந்த பாதுகாப்பும் கிடைக்காமல் உள்ளனர். இதனால் தனி மையில் வசிக்கும் பல முதியவர்கள் சமூக விரோதிகளின் தொந்தரவுகளை அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசு, மூத்த குமடிக்கள் மற்றும் பெற்றோர் நல விதி முறைகளை 2009-ம் ஆண்டில் ஏற்படுத்தியது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூத்த குடிமக்கள், பெற்றோர்களின் பாதுகாப்பை அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்லது மாநகர போலீஸ் கமிஷனர் உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலைய அதிகாரியும், தனது எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் நலனை தினசரி பராமரித்து உயர் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
குறிப்பாக ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். மேலும் மாதத்துக்கு ஒரு முறையாவது மூத்த குடிமக்களை போலீஸ் நிலைய அதிகாரி சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இதற்காக அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை. இதனால் முதியவர்கள் சமூக விரோதிகளின் தொந்தரவுகளை சந்தித்து வருகின்றனர். எனவே ஐகோர்ட்டு மதுரை கிளை எல்லைக்கு உள்பட்ட மாவட்டங்களின் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இந்த விதிமுறைகளை கடைபிடித்து மூத்த குடிமக்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் மாதம் 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.