தமிழ்நாடு (Tamil Nadu)

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து பொங்கி வரும் ரசாயன நுரை

Published On 2024-10-24 03:45 GMT   |   Update On 2024-10-24 03:45 GMT
  • ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
  • போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 15 கி.மீ. சுற்றி செல்ல வேண்டி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

ஓசூர்:

கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனிடையே நேற்று அணைக்கு வினாடிக்கு 1,718 கனஅடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு 1,670 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இன்று அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 4160 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகளும், குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுகளும் கலந்து தென்பெண்ணை ஆற்றில் வருகிறது.

இதனால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ரசாயன நுரை குவியல், குவியலாக வெளியேறி காற்றில் பறந்து விவசாய நிலங்களில் படர்வதால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த 5 நாட்களுக்கும் மேலாக இந்த நிலை நீடித்து வருகிறது.

ரசாயன நுரையுடன் பாய்ந்து செல்லும் வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்தது. தரைப்பாலத்தில் பல அடி உயரத்திற்கு நுரை காணப்படுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 15 கி.மீ. சுற்றி செல்ல வேண்டி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயன கழிவுகளுடன் நுரை பொங்கி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News