தொடர் விடுமுறை- ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- இன்று காலை முதலே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
- பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து மீன் சமையலை ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் உள்ளது.
இங்கு வெளி மாநிலம், வெளி மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக நேற்று முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
நீர்வரத்து கடந்த 2 தினங்களாக ஒகேனக்கல்லுக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகையும், அருவிகளில் விழும் தண்ணீரையும் ரசித்து பார்த்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் ஆயில் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளித்தும் மகிழ்கின்றனர்.
மேலும் பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து மீன் சமையலை ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.