தமிழ்நாடு

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 50 சதவீதம் தங்கம் விற்பனை

Published On 2024-11-02 03:57 GMT   |   Update On 2024-11-02 03:57 GMT
  • இவ்வளவு விலை இருந்தாலும் தங்கத்தின் மீதான மோகம் குறைந்தபாடில்லை.
  • தீபாவளி தினத்தன்று எதிர்பார்த்த அளவுக்கான விற்பனை இல்லை.

சென்னை:

தங்கம் ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து கொண்டே வந்து, தற்போது ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு விலை இருந்தாலும் தங்கத்தின் மீதான மோகம் குறைந்தபாடில்லை. அதை வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதிலும் பண்டிகை காலங்கள், சுப காரியங்களின்போது அதன் விற்பனை வழக்கத்தைவிட அதிகமான விற்பனையை பார்க்க முடியும். அந்த வகையில் தீபாவளி தினமான நேற்று முன்தினம் சென்னையில் தங்க நகைக் கடைகளில் விற்பனை எப்படி இருந்தது? என்பது பற்றி மெட்ராஸ் வைரம், தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு தீபாவளி விற்பனை சற்று சுமாராகத்தான் இருந்தது. வழக்கமான நாட்களைவிட அன்றைய தினம் கூடுதலாக 50 சதவீதம் விற்பனை என்றாலும், தீபாவளி தினத்தன்று எதிர்பார்த்த அளவுக்கான விற்பனை இல்லை.

தங்கம் விலை ஏற்றமும் விற்பனை குறைவுக்கு ஒரு காரணம் தான். விலை குறையட்டும் அதுவரை காத்திருப்போம் என சிலர் வாங்கும் ஆசை இருந்தும் பின்வாங்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தங்கம் விலை நேற்று முன்தினம் வரை ஏற்றத்துடனேயே இருந்தது. நேற்று அதன் விலை சற்று குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 455-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது.

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 385-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தை போல, வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.106-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. மேலும் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News