தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு
- பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது.
- கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரெயில், அரசு பஸ்களில் டிக்கெட் காலியாகிவிடுவதால், ஆம்னி பஸ்களை நாடிச்செல்கிறார்கள். ஆனால் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தாலும் கூட, அதையும் பொருட்படுத்தால் பல மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருவதால், ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடு என்று உயர்ந்துவிட்டது. குறிப்பாக, மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பஸ்களின் கட்டணம் என்பது குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 500 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.