தமிழ்நாடு

விழுப்புரத்தில் வேளாண் விற்பனை கூடத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு

Published On 2024-11-06 08:15 GMT   |   Update On 2024-11-06 08:15 GMT
  • திறந்த வெளி ஏலக்கொட்டகையில் தரப்பரிசோதனை நடைபெறுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
  • அரசு அலுவலர்கள் தெரிவித்த விவரங்களுடன் விவசாயி தெரிவித்த விவரங்கள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் விற்பனைக் குழு-ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் 2 ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட ஒரு கிடங்கு, 500 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 கிடங்குகள், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழவகைகள் (எளிதில் அழுகும் வேளாண் பொருட்கள்) இருப்பு வைத்து ஏல விற்பனை செய்வதற்காக 25 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு மற்றும் ஒரு திறந்தவெளி எலக் கொட்டகை ஆகிய வசதிகள் உள்ளன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல், நிலக்கடலை, பருத்தி, எள் ஆகிய வேளாண் பொருட்களை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்த அன்றைய தினமே தரப்பரி சோதனை கருவிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் ஏலதார்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் விடப்படுகின்றன.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் விற்பனைக்குழு-ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி எள், நிலக்கடலை (மணிலா) மற்றும் நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளையும், திறந்த வெளி ஏலக்கொட்டகையில் தரப்பரிசோதனை நடைபெறுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் விற்பனை செய்வதற்காக வந்திருந்த பிடாகத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்ற விவசாயியிடம் தற்பொழுது நெல் விற்பனை செய்ததற்கான ஏலத்தொகை விவரம், எத்தனை நாட்களுக்குள் தங்களுடைய வங்கி கணக்கில் நெல்லிற்கான தொகை வரவு வைக்கப்படுகிறது என்பது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்து, அரசு அலுவலர்கள் தெரிவித்த விவரங்களுடன் விவசாயி தெரிவித்த விவரங்கள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

மேலும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குடிநீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், அன்றாட சந்தை நில விவரம், விளைபொருட்கள் இருப்பு பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்டார்.

விவசாயிகள் விற்பனை செய்த விளைபொருட்களுக்கான ஏலத்தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் இ-நாம் மின்னணு ஏல முறை திட்டத்தின்கீழ், வரவு வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை கணினியில் அமர்ந்து கணினியை இயக்கி ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News