பாதாள சிவலிங்கத்தில் இருந்து தோன்றிய அபூர்வ நீரூற்று- பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்
- வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டதாகவும் கருதி பிடித்து செல்கின்றனர்.
- புனித நீராக வழங்கப்பட்டுsam வரும் நிலையில் நோய் தீர்க்கும் மருந்தாக இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்காம்பட்டியில் ஸ்ரீவாஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. அதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 20 அடி ஆழத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சிவலிங்கத்திற்கு அடியில் நீரூற்று தோன்றி சிவலிங்கம் வழியாக வழிய தொடங்கியது. அந்த நீரானது பாதாள சிவலிங்கத்தை சுற்றி சுமார் 1 அடியிலிருந்து 2 அடி வரை நீரூற்றிலிருந்து வெளியேறி தண்ணீர் அறை முழுவதும் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்கு ஊற்று பெருக்கெடுக்க தொடங்கியது.
இதனைக் கண்ட பக்தர்கள் அந்த தண்ணீரை புனித நீராக கருதி பிடித்து செல்கின்றனர். இந்த தண்ணீர் கும்பாபிஷேகத்திற்கு புனித நீராகவும், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளை போக்குவதாகவும், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டதாகவும் கருதி பிடித்து செல்கின்றனர்.
இந்த தகவல் பரவியதும் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து பாதாள சிவலிங்கத்தை வழிபட்டு புனித நீர் பெற்றுச் செல்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 20 அடி ஆழத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும்போது 2 அடி ஆழத்திற்கு கான்கிரீட் போடப்பட்டு பின்னர் அதன் மேல் டைல்ஸ் கல் பதிக்கப்பட்டு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆறு போல் ஊற்று பெருக்கெடுத்து வருவது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாகவும் தற்போது புனித நீராக வழங்கப்பட்டு வரும் நிலையில் நோய் தீர்க்கும் மருந்தாக இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சுக்காம் பட்டி சித்தர்ஸ்ரீலஸ்ரீ துரை ஆதித்தன் சுவாமிகள் அருளாசி வழங்கி புனித நீர் மற்றும் காணிக்கை பூக்களை பிரசாதமாக அளித்து வருகிறார்.