தமிழ்நாடு

விவாகரத்து வழக்கில் தம்பதியை நேரில் ஆஜராக நிர்பந்திக்க கூடாது- ஐகோர்ட் உத்தரவு

Published On 2024-10-24 02:21 GMT   |   Update On 2024-10-24 02:21 GMT
  • இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
  • வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியை நேரில்தான் ஆஜராக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

சென்னை:

அமெரிக்காவில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு ஆஜராகினர். ஆனால், அவர்கள், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை என்று கூறி, அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய குடும்பநல கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து மனைவி தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், "குற்றவியல் வழக்குகளில்தான் விசாரணைக்கு நேரில் ஆஜராவது கட்டாயமாகும். இதுபோன்ற விவாகரத்து வழக்கில் காணொலி வாயிலாக ஆஜராக வாய்ப்பு அளிக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியை நேரில்தான் ஆஜராக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அமெரிக்காவில் வசிக்கும் தம்பதியிடம் காணொலி காட்சி வாயிலாக விசாரிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

Tags:    

Similar News