ஏழை மக்களின் நலனுக்காக தி.மு.க. அரசு செயல்படுகிறது- அமைச்சர்
- திருப்பூரில் 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆவின் பால் உள்ளிட்ட பொருட்களின் தரத்தை மேலும் அதிகரிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திருப்பூர் வீரபாண்டி பிரிவு ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய வளாகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.
ஆய்வுக்கு பின் அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆவின் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 40 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையாகிறது மீதமுள்ள பால் கோவை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் திருப்பூரில் 50ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் உள்ளிட்ட பொருட்களின் தரத்தை மேலும் அதிகரிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் விரைவில் பன்னீர் பேக்டரி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தான் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆகையால் தான் பால் விலையை இன்னும் உயர்த்தாமல் ரூ.40க்கு வழங்கி வருகிறோம். ஏழை எளிய மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.