மருத்துவருக்கு கத்திக்குத்து: வாலிபருக்கு ஜாமீன் கிடைக்காதபோது 10 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு
- அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் விக்னேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- எந்த விதமான சூழலிலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றிய மருத்துவர் பாலாஜி மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே ஆஸ்பத்திரியில் தாம்பரத்தை அடுத்துள்ள புதுபெருங்களத்தூரை சேர்ந்த பிரேமா என்பவர் சிகிச்சை பெற்றுள்ளார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரை மகன் விக்னேஷ் உடனிருந்து கவனித்துள்ளார். தனது தாயாருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மருத்துவ விவரங்கள் பற்றி முறையாக தெரிவிக்கப்படவில்லை என்றும் இவர் கருதினார்.
இதைத்தொடர்ந்து அவர் மருத்துவர் பாலாஜியிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் தலை, உடல், கழுத்து உள்பட 7 இடங்களில் கத்தி குத்து விழுந்தது. இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த மருத்துவர் பாலாஜிக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலையில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு மருத்துவர் பாலாஜியை சக மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் வாலிபர் விக்னேசை சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். கிண்டி போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
விக்னேசிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தாய் பிரேமா, கிண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மருத்துவர் பாலாஜி முறையான சிகிச்சை அளிக்காமல் திட்டியதாலேயே ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தினேன் என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.
இதைதொடர்ந்து வாலிபர் விக்னேஷ் மீது கடுமையான 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கைதான அவரை போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று இரவு 11 மணி அளவில் புழல் சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசு கடந்த ஆண்டு ஐ.பி.சி. சட்டப்பிரிவுகளுக்கு பதிலாக புதிதாக பி.என்.எஸ் சட்டப் பிரிவுகளை உருவாக்கி அனைத்து குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் புதிய சட்டப் பிரிவுகளை உருவாக்கியுள்ளது.
அந்த சட்டப்பிரிவுகளின் படியே மருத்துவரை சரமாரியாக குத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் விக்னேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பி.என்.எஸ்.109 கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகள் பாய்ந்துள்ளதால் வாலிபர் விக்னேசுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தொவித்து
உள்ளனர். மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டது தொடர்பாக என்னென்ன பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
பி.என்.எஸ் 126(2) அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்.
115(2) திட்டமிட்டு தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்துதல்.
118(1) ஆபத்தான ஆயுதங்களால் தாக்கி கொடுங்காயத்தை ஏற்படுத்துதல்.
121(2) அரசு பணியில் இருப்பவரை அவரது கடமையை செய்ய விடாமல் தடுத்து தாக்குதலில் ஈடுபடுதல்.
109 (கொலை முயற்சி) 351 (3) நேரில் மிரட்டி எச்சரிக்கை விடுத்தல்.
இந்த 6 சட்டப்பிரிவுகள் தவிர 2008-ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ சட்டப்பிரிவான பிரிவு 3-ன் கீழும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின் கீழ் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் விக்னேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பிரிவுகள் அனைத்தும் ஆஸ்பத்திரியில் மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டப் பிரிவுகள் என்றும், இதனால் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எளிதாக ஜாமீன் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,
அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெறவருபவர்கள் பொறுமையை கடைபிடித்து செயல்பட வேண்டும் என்றும், எந்த விதமான சூழலிலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. ஆஸ்பத்திரிகளில் வன்முறை சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவர் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கிண்டி சம்பவத்தை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே கைதான வாலிபர் விக்னேஷ் கூறியிருப்பதை கிண்டி ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் முழுமையாக மறுத்து உள்ளனர்.
இது தொடர்பாக கூறியுள்ள அவர்கள், புற்று நோய் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த விக்னேசின் தாய் பிரேமாவுக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.