கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
- கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது.
- கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்து 41 மாதங்கள் கடந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் கரும்பு சப்ளை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் வேளாண்மை துறை அமைச்சர் அறிவித்தார்.
அதையே உறுதி செய்து தீபாவளிக்கு முன்பு அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் இத்தொகை வழங்கப்படும் என்று அரசின் சார்பில் செய்தி குறிப்பும் வெளியிடப்பட்டது.
ஆனால் இன்று வரை இத்தொகை கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான எந்த விதமான நடவடிக்கைகளையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை.
தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் ஊக்கத்தொகை கிடைக்காத கரும்பு விவசாயிகள் இந்தாண்டு தீபாவளியை வழக்கமான உற்சாகத்தில் கொண்டாட முடியாமல் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.