காட்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு
- திருவலம் அருகே வந்தபோது திடீரென என்ஜினில் உள்ள கப்ளிங் இணைப்பு பயங்கர சத்தத்துடன் உடைந்தது.
- அதிகாலை சுமார் 5 மணி முதல் 10.30 மணிக்கு மேல் வரை பணிகள் நடந்தது.
வேலூர்:
அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் ரேணிகொண்டா அரக்கோணம் வழியாக வந்து கொண்டிருந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் அருகே வந்தபோது திடீரென என்ஜினில் உள்ள கப்ளிங் இணைப்பு பயங்கர சத்தத்துடன் உடைந்தது.
இதனால் பெட்டிகளை விட்டு பிரிந்து என்ஜின் மட்டும் தனியாக கழன்று ஓடியது.
இதனைக் கண்டு என்ஜின் டிரைவர் திடுக்கிட்டார். ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் ஏதோ பெரிய விபத்து நடக்கப்போவதாக எண்ணி அலறி கூச்சலிட்டனர்.
என்ஜின் மீது பின்னால் வேகமாக வந்த பெட்டிகள் மோதாமல் இருக்கும் வகையில் லாவகமாக டிரைவர் என்ஜினை இயக்கினார்.
திருவலம் ரெயில் நிலையம் அருகே வந்தபோது என்ஜினை விட்டு பிரிந்த பெட்டிகள் தானாக தண்டவாளத்தில் நின்றன. அப்போது என்ஜினை நிறுத்திய டிரைவர் மீண்டும் பின்னோக்கி வந்து பெட்டிகள் அருகே நிறுத்தினார். இறங்கி பார்த்தபோது என்ஜினில் இருந்த கப்பளிங் உடைந்தது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக காட்பாடி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்த ஊழியர்கள் விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை சுமார் 8.45 மணி முதல் 10.50 மணி வரை பணிகள் நடந்தது. நடுவழியில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நின்றதால் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. அதிலிருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.