தமிழ்நாடு (Tamil Nadu)

சோழவந்தான் அருகே கண்மாயில் மூழ்கி தந்தை-மகன் உயிரிழப்பு

Published On 2024-10-26 05:34 GMT   |   Update On 2024-10-26 05:34 GMT
  • அழகர் தனது குடும்பத்தினருடன் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்ற புரட்டாசி பொங்கல் திருவிழாவுக்கு சென்றார்.
  • கணவர் மற்றும் மகனை காணவில்லை என மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்

சோழவந்தான்:

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேல மட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

சம்பவத்தன்று அழகர் தனது குடும்பத்தினருடன் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்ற புரட்டாசி பொங்கல் திருவிழாவுக்கு சென்றார்.

பின்னர் அழகர் தனது 4 வயது மகன் ஜெகதீஸ்வரனை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றார். அப்போது மகன் தனக்கு நீச்சல் கற்றுத்தருமாறு கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அழகரும் தனது மகனுக்கு கண்மாயில் நீச்சல் கற்றுக் கொடுத்தார். அப்போது 2 பேரும் ஆழமான பகுதியில் சென்று சிக்கியுள்ளனர். சேறும் சகதியுமாக இருந்ததால் அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. 2 பேரும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

இதனிடையே கணவர் மற்றும் மகனை காணவில்லை என மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

இன்று காலை கீழ மட்டையான் கண்மாயில் அழகர், ஜெகதீஸ்வரன் உடல்கள் மிதந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் உடனே காடுபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் தந்தை, மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக 2 பேரின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவுக்கு வந்தவர்கள் கண்மாயில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News