கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள், சில மனிதர்கள் சரியாக இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
- திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பல கோவில்களில் கால்நடைகளை பலியிடுதல் வழக்கம் உள்ளது
- அனைத்து மதத்தினரிடையே ஒற்றுமையை பேணவே தமிழக அரசு விரும்புகிறது.
மதுரையை சேர்ந்த கண்ணன், முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், "திருப்பரங்குன்றம் கோவில் பாண்டிய மன்னனின் காலகட்டத்தில் கட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் கோவிலின் தென் பகுதியில் உமையாண்டாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பகுதியில் எந்த உயிர் பலியிடுதல் கூடாது. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் தர்கா உள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடப்பட்டு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இது சுப்ரமணிய சுவாமி கோவில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
ஆகவே திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும் சமைத்து பரிமாறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசன் தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் திருப்பரங்குன்றனம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடை விதிக்கவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் திருப்பரங்குன்றம் மலை தொடடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை இன்று நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் அமர்வு விசாரித்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பல கோவில்களில் கால்நடைகளை பலியிடுதல் வழக்கம் உள்ளது. அனைத்து மதத்தினரிடையே ஒற்றுமையை பேணவே தமிழக அரசு விரும்புகிறது. அதன் அடிப்படையில் ஜனவரி 30 ஆம் தேதி இரு சமூகத்தினரிடையே கூட்டம் நடைபெற்றது. அதில், ஏற்கனவே இருக்கும் வழிபாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, "கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியாக இல்லை. திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது. தொல்லியல் துறைக்கு சொந்தம் என்ற வாதத்தை ஏற்க முடியாது" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.