null
அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- மருத்துவருக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளியின் குடும்ப உறுப்பினர், பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மருத்துவர் கிழே சுருண்டு விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அதே மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தாயாருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று மருத்துவர் மீது விக்னேஷ் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
புறநோயாளி என்ற சீட்டை பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்த விக்னேஷ் மருத்துவரை சரமாறியாக குத்தியுள்ளார். அவசர பிரிவில் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என கூறினார்.