தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
- மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- மருத்துவர் பாலாஜியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி மீது கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கத்தி குத்தால் தாக்கப்பட்டு கிண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்மருத்துவர் பாலாஜியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கிண்டி மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
மருத்துவரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்தனர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், " உயிரை காக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அடிப்படை கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் அரசு தோல்வி அடைந்துள்ளது.
வருங்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க வேண்டும். காயமடைந்த மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து ஆறுதலம் கூறினோம்." என்றார்.