தமிழ்நாடு

வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்கு தயாராகிறது குமரி திருவள்ளுவர் சிலை- இறுதி கட்டத்தை எட்டிய கூண்டு பால பணி

Published On 2024-11-21 06:54 GMT   |   Update On 2024-11-21 06:54 GMT
  • அந்த காலங்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே படகு போக்குவரத்து இயக்கப்படும்.
  • கூண்டு பாலத்திற்கான ஆர்ச் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

கன்னியாகுமரி:

உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் பாறை மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.

இவற்றை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். ஆனால் கடல் சீதோஷ்ண நிலை மாறுபடும்போது, திருவள்ளுவர் சிலை பகுதிக்கு படகுகள் இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

அந்த காலங்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே படகு போக்குவரத்து இயக்கப்படும். அங்கிருந்தே சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்க்கும் நிலை உள்ளது. இதனை மாற்ற விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கும் மேல் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு வல்லுனர்கள் கூண்டு பாலம் அமைப்பதற்கான தூண்கள் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

கூண்டு பாலம் பகுதியில் அமைக்கப்படும் ஆர்ச், புதுச்சேரியில் உருவாக்கப்பட்டு 110 பாகங்களாக கன்னியாகுமரி கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து பாலம் பணிகள் வேகம் பிடிக்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பணிகளை அமைச்சர்கள், சட்டமன்ற குழுக்கள் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளது.

133 அடி உயர திருவள்ளுவர் சிலை 2000-மாவது ஆண்டு ஜனவரி 1-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் 25-வது ஆண்டு வெள்ளிவிழா, அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 1-ந் தேதி வருகிறது. அதனை சிறப்பாக கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந் தேதி மற்றும் ஜனவரி 1-ந் தேதி விழா நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.

இதனை முன்னிட்டு தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கூண்டு பாலத்திற்கான ஆர்ச் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. தொடர்ந்து தரைதளம் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு இன்று கன்னியாகுமரி வருகிறார். அவர், திருவள்ளுவர் சிலையில் நடைபெறும் கூண்டுபால பணிகளை ஆய்வு செய்கிறார்.

Tags:    

Similar News