தமிழ்நாடு

திருவண்ணாமலையை போல அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்- அமைச்சர் தகவல்

Published On 2024-11-13 06:12 GMT   |   Update On 2024-11-13 06:12 GMT
  • மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு 42 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

கடந்த ஆண்டு தீபத் திருவிழாவுக்கு 35 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. இந்த ஆண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்களுக்கு என மொத்தம் 42 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக தற்காலிகப் பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். நெரிசலைத் தவிர்க்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நாளில் அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதைப்போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றப்படும்

தீபம் ஏற்ற தேவையான நெய், எண்ணெய் மற்றும் திரி ஆகியவற்றை இந்துசயம அறநிலையத்துறை சார்பில் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வுக் கூட்டத்தில் பொதுப் பணி, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

பரணி தீபத்தைக் காண வரும் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பக்தர்களுக்கு ஒரே மாதிரியான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு 2-ம் பிரகாரத்தில் இருந்து பரணி தீபத்தைக் காண ஒரு வண்ணத்திலும், 3-ம் பிரகாரத்தில் இருந்து காண மற்றொரு வண்ணத்திலும் அனுமதிச் சீட்டுகளை அச்சடித்து வழங்க வேண்டும்.

தீபத் திருவிழாவைக் காண தவறான அனுமதிச் சீட்டுகளுடன் வரும் பக்தர்கள் மீது போலீசார் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகளை அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News