நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை- மு.க.ஸ்டாலின்?
- 234 தொகுதிகளிலும், ஸ்டாலின் தான் வேட்பாளர் என நினைத்து பணியாற்ற வேண்டும்.
- கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. அதற்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலின்போதும் இதே போல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த பார்வையாளர்களில் 60 சதவீதம் பேர்களை எடுத்து விட்டு இப்போது இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல அணிகளில் உள்ளவர்கள் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.
சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற கடுமையாக பணியாற்ற வேண்டும். வரும் தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற உள்ளோம். 234 தொகுதிகள் என்றாலும் நாம் 200 தொகுதிகளை பெற வேண்டும். 234 தொகுதிகளிலும், ஸ்டாலின் தான் வேட்பாளர் என நினைத்து பணியாற்ற வேண்டும். நமது கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை, அதை நான் பார்த்துக் கொள்வேன்" என்று பேசியுள்ளார்.
மேலும், இக்கூட்டத்தில் பேசிய அவர், "நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை, இந்த இயக்கம் இது போன்ற பலரைப் பார்த்துள்ளது" என்று பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கருத்து விஜயை மறைமுகமாக வைத்து அவர் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.