தமிழ்நாடு (Tamil Nadu)

திமுக கூட்டணியில் குழப்பம் எதுவுமில்லை- கே.பாலகிருஷ்ணன்

Published On 2024-10-22 22:45 GMT   |   Update On 2024-10-22 22:45 GMT
  • ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில சுயாட்சி பறிக்கப்படும்.
  • திமுக கூட்டணி அதிமுக கூட்டணி போல் அடிமை கூட்டணி இல்லை.

மதுரை:

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் 2025-ம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மோசமான நடவடிக்கைகளை எதிர்த்து நாடு தழுவிய கண்டன இயக்கத்தை ஒரு வாரம் நடத்த உள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில சுயாட்சி பறிக்கப்படும்; கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படும்.

கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிந்த பின்பும் மத்திய அரசு இன்னும் புதிய கவர்னரை நியமிக்கவில்லை; மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் நபரை மத்திய அரசு கவர்னராக நியமிக்க வேண்டும். சிபிஎம்ஐ பொறுத்தவரை கவர்னர் பதவி தேவை இல்லை. தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

திமுக கூட்டணி அதிமுக கூட்டணி போல் அடிமை கூட்டணி இல்லை. அதிமுக பாஜக கூட்டணியின்போது தமிழ்நாட்டின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி காவு கொடுத்தார். எடப்பாடி பழனிசாமி கூறுவது போல திமுக கூட்டணியில் குழப்பம் எதுவுமில்லை, கோரிக்கையை நிறைவேற்ற சொல்வதில் என்ன குழப்பம். மத்திய அரசை எதிர்த்து உறுதியாக போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News