கிருஷ்ணசாமி சாலையில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
- அனுமதி வழங்கிய நேரத்தில் போராட்டம் நடத்தாததால், காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
- போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்யத் தொடங்கினர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணசாமி கட்சியினர் இன்று காலை போராட்டம் நடத்த முடிவு செய்தனர். காவல்துறையினர் அனுமதி வழங்கிய நேரத்தில் போராட்டம் நடத்தாததால், காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்யத் தொடங்கினர்.
இதனால் காவல்துறையினருடன் கிருஷ்ணசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் கொட்டும் மழையில் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
பேரணிக்கு அனுமதி கொடுத்துவிட்டு ஆயிரக்கணக்கானோர் வந்தபின் அனுமதி மறுப்பது ஏன்? என போலீசாரிடம் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார். பின்னர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டார்.