தமிழ்நாடு

தனியார் பால் விலை உயர்கிறது - பால் முகவர்கள் சங்கம் எதிர்ப்பு

Published On 2024-11-07 08:49 GMT   |   Update On 2024-11-07 08:49 GMT
  • பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது.
  • கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பால், தயிர் விற்பனை விலையை சொற்ப அளவில் மட்டும் குறைந்திருந்தனர்.

சென்னை:

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பால் கொள்முதலில் எந்த ஒரு விலை உயர்வோ, பால் உற்பத்தியில் பாதிப்போ, தட்டுப்பாடோ இல்லாத சூழலில் தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா, பால், தயிர் விற்பனை விலையை நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அந்நிறுவனம் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது.

அதன்படி நிறை கொழுப்பு பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.36-ல் இருந்து 37 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.65-ல் இருந்து 67 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.31-ல் இருந்து 32 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.58-ல் இருந்து 60 ஆகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30-ல் இருந்து 32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37-ல் இருந்து 38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66-ல் இருந்து 68 ஆகவும் உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இது பொதுமக்கள் தலையில் பெரும்பாரத்தை சுமத்தும் செயலாகும் என்பதோடு, இந்த பால், தயிர் விற்பனை விலை உயர்வானது மற்ற தனியார் பால் நிறுவனங்களையும் விற்பனை விலையை உயர்த்த தூண்டுவது போல் ஆரோக்யா நிறுவனத்தின் செயல்பாடுகள் அமைந்து உள்ளது கண்டிக்கத்தக்கதாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பால், தயிர் விற்பனை விலையை சொற்ப அளவில் மட்டும் குறைந்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஓராண்டில் பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்கள், வாகன எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகளில் மட்டுமல்ல பால் முகவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்திட பால், தயிர் விற்பனைக்கான கமிஷன் தொகையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாத சூழலில் ஆரோக்யா நிறுவனம் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்துவது என்பது ஏற்புடையதல்ல என்பதால் இந்த விற்பனை விலை உயர்வை ஆரோக்யா நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News