அ.தி.மு.க.வின் கட்டுக்கதை அறிக்கைகளை மக்கள் நம்பப் போவதில்லை: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
- நல்லாட்சி வழங்கிவரும் திராவிட மாடல் ஆட்சியின்மீது சில கண்டன தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
- அ.தி.மு.க.வின் கட்டுக்கதை அறிக்கைகளை மக்கள் நம்பப் போவதில்லை என தெரிவித்தார்.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் முதலமைச்சர் தலைமையிலே நல்லாட்சி வழங்கிவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது சில கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி அதன்மூலம் களங்கம் சுமத்திடலாம் என கற்பனைக் கோட்டை கட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. அரசுமீது எதைச் சொல்லி பழி போடுவது என தெரியாமல் இட்டுக்கட்டிய பொய்களை எழுதி நிரப்பி கண்டனத் தீர்மானம் என கதை கட்டியிருக்கிறார் 'கட்டுக்கதை' பழனிசாமி.
ஃபெஞ்சல் புயலால் எதிர்பார்க்காத அளவு அதி கனமழை பெய்தபோதும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் என கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் பசிபிக் கடலளவு பெருகிக் கிடந்த அலங்கோல ஆட்சி நடத்திய பழனிசாமி தற்போது குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களைக் காத்துவரும் திராவிட மாடல் ஆட்சிமீது சுண்டுவிரலை நீட்டிக்கூட பேச தகுதியில்லை.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கான அனுமதியைக் கொடுக்க காரணமே அடிமை அ.தி.மு.க. ஆட்சிதான். 2019-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை மேலூர் பகுதியில் இரவோடு இரவாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்தான் அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்து ஏலம் விட்டுள்ளது.
தனது ஆட்சிக்காலத்தில் சிறையில் வாடும் இஸ்லாமிய மக்களை விடுவிக்க சிறு துரும்பை கூட கிள்ளிப்போடாத பழனிசாமி தற்போது யோக்கியன் நாடகம் போட்டால் மக்கள் ஏமார்ந்து விடுவார்களா என்ன?
தற்போதும் கூட மறைமுகமாக மதவாத பாஜகவோடு கள்ள உறவில் கைகோத்து இருக்கும் பழனிசாமி, ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை; தீர்மானங்களில் கூட பாஜகவுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல் தான். ஆனால் சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசுக்குக் கண்டனமாம்.
இப்படி கபட வேடம் பூண்டிருக்கும் பழனிசாமி என்றுமே சிறுபான்மை மக்களின் அரணாக நிற்கும் திராவிட மாடல் ஆட்சியை குறை கூறினால் மக்கள் நம்பிவிடுவார்களா என்ன?
தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம் என முதலமைச்சரின் தலைமையிலே சிறப்பாக நடந்துவரும் திராவிட மாடல் ஆட்சிமீது அள்ளிவிடும் அ.தி.மு.க.வின் கண்துடைப்பு கண்டனக் கதைகளைத் தமிழ்நாட்டு மக்கள் துளியும் நம்பப்போவதில்லை; கட்டுக்கதை பழனிசாமியின் துரோகத்தையும் மறக்கப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.