நான் நலமாக உள்ளேன்.. மருத்துவர் பாலாஜி
- கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி கூறுகிறார்.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர் பாலாஜியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் என்றும் இதய பாதிப்பு அவருக்கு உள்ளதால் இதயவியல் சிறப்பு மருத்துவக் குழுவும் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி நான் நலமாக உள்ளேன் என்று கூறும் வீடியோவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கூறும் மருத்துவர் பாலாஜி நான் நலமாக இருக்கிறேன். காலை உணவு சாப்பிடுவதாகவும் கூறுகிறார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி கூறுகிறார்.
முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.