தமிழ்நாடு

2026 சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

Published On 2024-11-03 07:23 GMT   |   Update On 2024-11-03 07:23 GMT
  • தி.மு.க.வில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது.
  • தி.மு.க.வில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

சேலம்:

எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி வீரப்பம்பாளையம் பகுதியில் எடப்பாடி நகர அ.தி.மு.க சார்பில் செயல் வீரர்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 11 சட்டமன்ற தொகுதியில் 10 இடங்களில் வென்றது அ.தி.மு.க கூட்டணி. சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தி.மு.க.வில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது. தி.மு.க.வில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. கட்சியை வளர்த்தவர்கள், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், மூத்த அமைச்சர்கள் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு கருணாநிதி குடும்பத்தில் பிறந்த மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதியை இன்றைக்கு துணை முதலமைச்சராக்கி இருக்கின்றீர்கள் என்றால் அங்கு சர்வாதிகாரம் தலைதூக்கி இருக்கின்றது.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்தது உதயநிதி இளவரசராக இருக்கின்றார். அவர் முதலமைச்சர் என்கிற ஸ்டாலினுடைய கனவு ஒருபோதும் தமிழகத்தில் பலிக்காது.

தி.மு.க.வில் கருணாநிதி தலைவராக இருக்கும்போது ஸ்டாலினை வளர்த்துவதற்கு கட்சியில் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். 20 ஆண்டு காலம் ஸ்டாலின் அந்த கட்சிக்காக உழைத்தார். இதை இல்லை என்று நாங்கள் மறுக்கவில்லை. அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். மேயராக இருந்தார். எதிர்கட்சி தலைவராக இருந்தார். அப்புறம்தான் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இதற்கு 20 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் கட்சிக்காக பாடுபடாமல் தி.மு.க. என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு, கருணாநிதி குடும்பம் என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் என பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்தியாவிலேயே மன்னராட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் மன்னராட்சி என்பது ஒருபோதும் எடுபடாது. அதற்கு மக்களும் அனுமதிக்க மாட்டாங்க.



குடும்ப கட்சியாக மாறிவிட்டது தி.மு.க., வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக அமையும் ஸ்டாலின் அவர்களே. நீங்கள் எவ்வளவோ முயற்சி பண்ணுகிறீங்க. தன்னுடைய மகனை பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள வைத்து மக்களிடத்திலே ஈர்ப்பு சக்தி உண்டாக்க வேண்டும் என்பதற்கு முயற்சி செய்கிறீங்க. எந்த ஒரு முயற்சியும் எடுபடாது.

மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டை பொறுத்தவரையும் விழிப்புணர்வு கொண்ட மக்கள். 2011-க்கு பிறகு 2021 வரை அதி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருந்தது என சற்று நினைத்து பாருங்கள்.

எடப்பாடி தொகுதி என்று சொன்னால் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் எடப்பாடியிலேயே இருக்கின்றார் என்கிற ஒரு அடையாளத்தை இன்றைக்கு தமிழக மக்கள் கொடுத்து இருக்கிறார்கள்.

10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம் என்பதை நாங்கள் நிரூபித்து காட்டினோம்.

தி.மு.க. ஆட்சியில் எதிர்கட்சி சொல்வதை காது கொடுத்து கேட்பது கிடையாது. தி.முக. ஸ்டாலின் ஆட்சியில் தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை நிறுத்தப்பட்டு விட்டது. அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என எவ்வளவோ சூழ்ச்சி செய்தாங்க. ஆனால் நடக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News