தமிழக அரசாணைகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டும் ஏன் நிறைவேற்றவில்லை? நீதிபதிகள் கேள்வி
- நீதிமன்றம் 8 வாரங்களுக்குள்ளாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தது.
- தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியின் நலனுக்காகவே திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ் மொழியின் சிறப்பு மிக்க எழுத்தாக சிறப்பு ழகரம் உள்ளது.
அரசு தொடர்பான அரசாணைகளில் ஸ்டேட் கவர்மெண்ட் ஆப் தமிழ்நாடு எனக் குறிப்பிடப்படுகிறது. இது 'டமில் நடு' என தவறாக உச்சரிக்கும் வகையில் உள்ளது. ஆகவே சிறப்பு ழகரம் இடம்பெறும் வகையில் ஆங்கிலத்தில் 'எல்' என்பதற்கு பதிலாக 'இசட்' என திருத்தம் செய்யக்கோரி கடந்த 2021-ல் வழக்கு தொடர்ந்தேன்.
நீதிமன்றம் 8 வாரங்களுக்குள்ளாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இதுவரை அது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியின் நலனுக்காகவே திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது.
ஆகவே அரசின் சுற்றறிக்கைகளில் ஆங்கிலத்தில் தமிழ்நாடு என்பதற்கு 'எல்' என்ற எழுத்திற்கு பதிலாக 'இசட்' என்ற எழுத்தை திருத்தம் செய்து பயன்படுத்தவும், மேலும் சேர, சோழ, பாண்டியர்களின் சின்னங்களை கொண்டு தமிழ்நாட்டிற்கென கொடியை வடிவமைத்து பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு, ஆங்கிலத்தில் தமிழ்நாடு என்பதற்கு 'எல்' என்பதை 'இசட்' என திருத்தம் செய்ய ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.
எனவே இந்த விவாகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுங்கள் என கூறிய நீதிபதிகள் மனுதாரரின் மனுவை பரிசீலித்து விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.