தமிழ்நாடு

கோவில் பூசாரி தற்கொலை விவகாரம்- ஓ.பி.எஸ். தம்பி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு

Published On 2024-11-12 07:48 GMT   |   Update On 2024-11-12 07:48 GMT
  • மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
  • ஓ.ராஜா உள்பட 3 பேர் ஆஜராகாத நிலையில் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

திண்டுக்கல்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (வயது 22). இவர் கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார்.

கோவிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி என்பவர் இறந்து விட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமின் பெற்று இருப்பதால் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.

இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். 4 தடயங்கள், சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பின் இறுதி கட்ட வாதத்துக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்த இந்த வழக்கு விசாரணையின் போது 3 பேர் மட்டும் நீதிபதி முரளிதரன் முன்பு ஆஜராகினர்.

அப்போது ஓ.ராஜா உள்பட 3 பேர் ஆஜராகாத நிலையில் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நாளை (13-ந்தேதி) வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். எனவே நாளை குற்றம் சாட்டப்பட்ட ஓ.ராஜா உள்பட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News