தமிழ்நாடு

தமிழக அரசின் வரி உயர்வுக்கு கடும் கண்டனம்: மதுக்கடைகளை மூட வேண்டும்- த.வெ.க. செயற்குழு தீர்மானங்கள்

Published On 2024-11-03 08:22 GMT   |   Update On 2024-11-03 08:34 GMT
  • தமிழ்நாட்டில் முதியோர் நலனை உறுதி செய்யும் கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
  • கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக இருக்கின்ற வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

சென்னை:

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* முதலில் திருவள்ளுவருக்கு வர்ணம் பூசினர். அடுத்து தமிழகம் வேறு, தமிழ்நாடு வேறு என்றனர். அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். பிளவுவாத அரசியல் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிப்போர், எங்கள் தாய்மொழித் தமிழ் மட்டுமல்லாமல், தமிழ்மொழி சார்ந்த எந்த ஒன்றிலும் தலையிட ஒன்றிய அரசுக்கு மட்டுமல்ல எங்கள் தாய்மொழி காக்கும் எல்லா முயற்சிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சமரசமின்றிச் செயல்படும். தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக, மூன்றாவது மொழியைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசின் கனவு, எமது மொழிப்போர் தியாகிகள் வாழ்ந்த மண்ணில் எக்காலத்திலும் நிறைவேறாது என்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உரக்கச் சொல்லிக்கொள்கிறது.

* அரசின் வருவாயைப் பெருக்க எந்த ஓர் அறிவார்ந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல், மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்று பொதுமக்கள் மீது மேலும் மேலும் வரிச்சுமையை மட்டுமே அதிகமாக விதித்து, மக்களின் பொருளாதார நிலையைக் கேள்விக்குறி ஆக்கியுள்ள திமுக அரசுக்கு இச்செயற்குழு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

* அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில், பட்டப்பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது. மேலும், தொடரும் கள்ளச்சாராய விற்பனை, இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப் பொருட்களின் பழக்கம் போன்ற நிர்வாகச் சீர்கேடுகளைச் சரிசெய்யாமல், மக்கள் நலனைக் காட்டிலும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனிலேயே அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஆளும் திமுக அரசுக்கு இச்செயற்குழு கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

* ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பொய்களின் பட்டியலாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதன் வாயிலாக ஜனநாயகத்தையும் மக்களையும் ஏமாற்றியதுதான் தற்போதைய ஆளும் கட்சியான திமுக. தேர்தல் வாக்குறுதியை வழக்கம் போலக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத மின்கட்டண உயர்வைத் திணித்துள்ள தமிழக அரசு, இரு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையைக் கை விட்டு, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

* மகளிர் உரிமைத் தொகை, பரிசுத் தொகுப்பு என்று ஒரு புறம் அறிவித்து விட்டு, மறுபுறம் மதுக்கடைகளைத் திறந்து, அதன் மூலம் அரசுக்கு வருவாயைப் பெருக்கி வருவது ஏற்புடையதல்ல. சமூகக் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் மதுக்கடைகளைக் கால நிர்ணயம் செய்து மூட வேண்டும். மதுக்கடை மூலம் பெறும் வருவாயை விடக் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்றுத் திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

* தென்னிந்தியாவிற்கான உரிய பிரதிநிதித்துவம் வழங்குகின்ற வகையில், உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க வேண்டும். நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் வழக்கு சம்பந்தப்பட்ட வாதி மற்றும் பிரதிவாதிகள் தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லும்போது அதைச் சரியாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீதிபதி ஒருவர் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு, இதைச் சட்டரீதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

* தமிழ் மண்ணின் மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர் ஆட்சியின் வரலாற்றுப் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றும் வகையில், பிரமாண்டமான அருங்காட்சியகம் சென்னையில் கட்டப்பட வேண்டும்.

* தமிழக அரசால் புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்படும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், நூலகங்கள் மற்றும் கலையரங்கங்களுக்கு, தமிழ் மண்ணிலிருந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிப்போர்த் தியாகிகளின் பெயர்களைச் சூட்டி, அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.

* இஸ்லாமிய சகோதரிகளின் தமிழ்த் தொண்டை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு அரசு சார்பில் கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட வேண்டும்.

* தமிழ்நாட்டில் முதியோர் நலனை உறுதி செய்யும் கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

* கன்னியாகுமரிப் பகுதியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இன்னொரு முயற்சியே இது. எங்கள் மண்ணையும் மக்களையும் பாழ்படுத்தும் இதுபோன்ற அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டங்களை உடனடியாகக் கைவிடவேண்டும்.

* கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக இருக்கின்ற வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

* நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள், குறிப்பாக, கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அனைவருமே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு விலக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். ஒருவேளை அதில் சிக்கல் இருக்கிறது என்றால், ஓர் இடைக்காலத் தீர்வாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி, ஒரு சிறப்புப் பொதுப் பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வியைச். சேர்க்க வேண்டும். மாநில அரசுகளுக்கு முழுச் சுதந்திரம் தரப்பட வேண்டும். அப்போது தமிழ்நாட்டில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியும். எனவே கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பெருமைப்படுத்திடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் 'தகைசால் தமிழர் விருது' வழங்குகிறது. இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வருவதற்காகத் தமிழக அரசை இச்செயற்குழு வரவேற்கிறது.

* இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் சுமார் 2,376 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைக்க உள்ளது. இதன் மூலம் தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றியதுடன், பெரும் வேலை வாய்ப்புகளை வழங்கும் ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை இச்செயற்குழு வரவேற்கிறது.

இயக்கத்திற்காகவும் கழகத்திற்காகவும் நீண்ட காலமாகப் பணியாற்றி, உடல்நலக் குறைவால் திடீரெனக் காலமான கழகப் போராளி புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன், மாநாட்டில் பங்கேற்க வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த திருச்சி தெற்கு மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் வழக்கறிஞர் வி.எல்.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்டக் கழகத் துணைத் தலைவர் ஜே.கே.விஜய்கலை, கழகத் தோழர்கள் வசந்தகுமார், ரியாஸ், உதயகுமார் மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கழகத் தோழர்சார்லஸ் ஆகியோர் மறைவுக்கு இச்செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய களப் பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News