தமிழ்நாடு (Tamil Nadu)

தேவர் குருபூஜை விழாவையொட்டி 13 கிலோ தங்க கவசம் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைப்பு

Published On 2024-10-25 11:13 GMT   |   Update On 2024-10-25 11:13 GMT
  • கடந்த ஆண்டு தங்கக்கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
  • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.

மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.3 கோடி மதிப்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வழங்கினார். விழா முடிந்த பிறகு இந்த கவசம் மதுரையில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதனை வருடந்தோறும் அ.தி.மு.க. பொருளாளர் மூலம் பெற்று தேவர் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்படும். அதன்படி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதனை பெற்று தேவர் குருபூஜை விழாக்குழுவினரிடம் வழங்கி வந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு தங்கக்கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

வருகிற 30-ந்தேதி தேவர் குருபூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து தங்க கவசம் எடுத்து அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் மற்றும் டாக்டர் சரவணன், எஸ்.எஸ்.சரவணன், நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், ராஜ்சத்யன், நிலையூர் முருகன், வக்கீல் ரமேஷ், சோழவந்தான் கருப்பையா, திரவியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News