விஜய் உடன் கூட்டணியா? "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்.." என சாடிய திருமாவளவன்!
- விஜய்யின் மாநாட்டு உரை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நடிகர் விஜய் எத்தகைய எதிர்பார்ப்புடன் இதனை அறிவித்தார் என்பது நமக்குத் தெரியாது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
"மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டையொட்டி, பரந்த பார்வையோடு பொதுநல நோக்கோடு, "அ.தி.மு.க.வும் மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமே" என நாம் கூறியதை, ஒரு சாக்காக வைத்துக் கொண்டு நமது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த வேகமாக களத்தில் இறங்கினர்.
தற்போது, த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய்யுடன் நாம் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்கிற தோற்றத்தை உருவாக்கிட முனைகின்றனர்.
அவர் அண்மையில் மாநாட்டில் ஆற்றிய உரையில் தம்மோடு இணைய விருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்தார்.
நடிகர் விஜய் எத்தகைய எதிர்பார்ப்புடன் இதனை அறிவித்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், "ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்பது 'விடுதலைச்சிறுத்தைகளின் கோரிக்கை தானே; எனவே, அவர்களைக் குறிவைத்து தான் நடிகர் விஜய் பேசி உள்ளார்' என்கிற ஊகத்தில் அரசியல் தளத்தில் உரத்த உரையாடல்கள் நடந்தன. அது தவிர்க்க இயலாத ஒன்றேயாகும்.
நாம் ஒரு வலுவான கூட்டணியில் இருக்கிறோம். அதனைவிட்டு வெளியேறும் தேவை ஏதுமில்லை என்பதை அறிக்கை மற்றும் நேர்காணல்கள் மூலம் தெளிவுப்படுத்தினோம்.
எனினும், மீண்டும் அவர்கள் நம்மைக் குறிவைத்து அரசியல் சதிவலைகளைப் பின்னுகின்றனர்.
டிசம்பர் -6, புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளன்று "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்னும் நூல்வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அவ்விழாவில் அரசியல் சாயம்பூசி நம்மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க சதிதிட்டம் தீட்டுகின்றனர். நமது கூட்டணியின் உறுதித்தன்மையை பரிசோதித்துப் பார்க்கின்றனர்.
இதற்கான அழைப்பு கடிதத்தை கொடுக்கும் போது நடிகர் விஜய்யும் நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்கவிருக்கிறார் என்பதை கூறினார்கள். அப்போதைய சூழலில் நடிகர் விஜய்யின் கட்சி மாநாடு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய்யின் மாநாட்டு உரை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்"
திட்டமிட்டே நம் மீது அய்யத்தை எழுப்புவோர் தி.மு.க.வுக்கு மட்டுமல்ல; வி.சி.க.வுக்கும் நமது கூட்டணிக்கும் பகையானவர்களேயாகும். அத்தகைய நய வஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகி விடக்கூடாது.
தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்!
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.