தமிழ்நாடு

கொடிவேரி அணையில் தண்ணீர் அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Published On 2024-10-24 05:01 GMT   |   Update On 2024-10-24 05:01 GMT
  • கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான நம்பியூர், சத்தி, கொடிவேரி சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
  • கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது.

கோபி:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பவானி ஆற்றின் வழியாக கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது. இதனால் கொடிவேரி தடுப்பணை ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது.

இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். வெளி மாநில பயணிகளும் வந்து செல்கிறார்கள். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அணைக்கு வருவது வழக்கம். இதனால் இங்கு மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான நம்பியூர், சத்தி, கொடிவேரி சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் அதிகளவில் சென்று வருகிறது.

இதே போல் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கும் கணிசமான தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.

இந்த நிலையில் பவானி சாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் 860 கன தண்ணீர் அடி வெளியேறி வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் அந்த பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

இதனால் அங்கு இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் நுங்கும், நுரையுமாக செல்கிறது. இதையொட்டி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் தடை விதிக்கப்படுகிறது என நீர்வளத்துறை அதி காரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து இன்று குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் கொடிவேரிக்கு வந்து இருந்தனர். அங்கு தடை விதிக்கப்பட்டு நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News