நாய்க்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டுறவு அதிகாரி வீட்டில் ரூ.20 லட்சம் நகை-பணம் கொள்ளை
- வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சேகர்புரம் ஏரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 49). இவர், அங்குள்ள கூட்டுறவு சொசைட்டியில் தணிக்கையாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தண்டபாணி, உடல் நிலை பாதிப்பின் காரணமாக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டிற்குள் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ லாக்கரில் இருந்த 27 பவுன் தங்க நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம், வெள்ளி பொருட்கள் உள்பட மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பிலான நகை-பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
உடனே இது குறித்து தண்டபாணி உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளனர். அப்போது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் குரைக்கவே, கொள்ளையர்கள் நாய்க்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். நாய் மயங்கியதும் வீட்டிற்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.