மீண்டும் உயரும் வைகை அணை நீர்மட்டம்- கும்பக்கரை அருவில் 4-வது நாளாக குளிக்க தடை
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது.
- கும்பக்கரை அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் மூல வைகையாறு தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் நீர்வரத்து அதிகமாகக்கூடும் என நீர் வளத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். நீர்வரத்து அதிகரித்த நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 569 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 1171 கனஅடி நீர் வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 58.23 அடியாக உள்ளது. அணையில் 3273 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது. 420 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர்திறக்கப்படுகிறது. அணையில் 3054 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் பல நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 30 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வட்டக்கானல், வெள்ளக்கவி ஆகிய இடங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்றும் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு குறையாமல் இருப்பதால் அருவி பகுதிக்கு செல்ல தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதனால் கும்பக்கரை அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.
வீரபாண்டி 2.8, உத்தமபாளையம் 1.6, கூடலூர் 2.2, பெரியாறு அணை 0.6, தேக்கடி 1.4, சண்முகாநதி 1.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.