தமிழ்நாடு

தனியார் பால் நிறுவனத்தின் ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு- கிராம மக்கள் புகார்

Published On 2024-11-17 05:45 GMT   |   Update On 2024-11-17 05:45 GMT
  • பல்வேறு ரசாயன வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
  • மாசுபட்டு வரும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா, பட்டக்காரன்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பிரபல தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறது.

அதுமட்டுமின்றி தயிர், மோர், வெண்ணெய், பன்னீர், மசாலா பால், மசாலா மோர் போன்றவற்றை தயாரிப்பு பிளாஸ்டிக் கப்புகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. இது தவிர பல்வேறு நிறங்களில் உயர்தரமான ஐஸ்கிரீம் வகைகளையும் உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை சுத்திகரித்து, கெட்டுப்போகாமல் பதப்படுத்த பல்வேறு ரசாயன வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு ரசாயனங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பால் மற்றும் அதன் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் போர்வெல் மூலமாக பூமிக்குள் இறங்குவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த ரசாயனம் கலந்த கழிவுநீர் நிலத்தடிநீரை பெரிதும் மாசுபடச் செய்கிறது என்றும், இதன் காரணமாக இந்த பகுதியை சுற்றியுள்ள பல கிணறுகளின் தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இங்குள்ள கிராமங்களில் உள்ள கிணறுகளின் தண்ணீர் பால் போன்று வெள்ளை நிறத்தில் மாறி விட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

அண்மைகாலமாக பெருமாபாளையம், சுள்ளி பாளையம், கணக்கம் பாளையம், பள்ளக்காட்டூர், பட்டக்காரன்பாளையம், மலை சீனாபுரம், ஓலப்பாளையம் போன்ற கிராம பகுதிகளில் உள்ள கிணறுகளின் தண்ணீர் வெள்ளை நிறத்தில் பால் போன்று காட்சியளிக்கிறது. இந்த தண்ணீரில் ரசாயனம் கலந்த பால் வாடை தான் அதிகமாக இருக்கிறது. இந்த தண்ணீரை குடிப்பதற்கோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியவில்லை. அருகில் உள்ள பிரபல பால் கம்பெனியில் பிரமாண்டமான அளவில் பாலை பதப்படுத்தி பால் உற்பத்தி சார்ந்த பொருட்களை தயாரிக்கிறார்கள்.

இதற்காக அதிக அளவில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அப்போது வெளியாகும் ரசாயனம் கலந்த கழிவுநீர் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் பூமிக்குள் ஆழ்குழாய் மூலம் இறக்கி விடுவதாக சந்தேகிக்கிறோம். இதன் காரணமாகவே இந்த பால் கம்பெனியை சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் பெரிதும் மாசுபட்டு உள்ளது. இதுவரை நாங்கள் பயன்படுத்தி வந்த கிணற்று தண்ணீர் வெள்ளை நிறத்தில் பால் போன்று மாறிவிட்டது. அதிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் கலந்த பால் வாடையும் வீசுகிறது. இதனால் சுற்று ப்பகுதியில் உள்ள கிணற்று தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே இந்த பகுதியில் மாசுபட்டு வரும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News