உள்ளூர் செய்திகள்

கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் ரத்தால் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2024-11-17 06:43 GMT   |   Update On 2024-11-17 06:43 GMT
  • அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
  • பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சென்னை:

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் ரெயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரை -தாம்பரம் இடையே இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் வசதிக்காக கடற்கரை-பல்லாவரம் இடையே 45 நிமிட இடைவெளியில் மட்டும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகுதான் வழக்கமாக ரெயில் சேவை ஞாயிறு கால அட்டவணை அடிப்படையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வயதான முதியோர் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இதுபற்றி சானடோரியம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ஆதங்கத்துடன் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாகவே தாம்பரம்-கடற்கரை ரெயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

பராமரிப்பு பணிகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து இரவு-பகலாக சரி செய்ய வேண்டியது தெற்கு ரெயில்வேயின் பொறுப்பாகும். ஆனால் இதை தெற்கு ரெயில்வே கடைபிடிப்பதில்லை.

பல மாதங்களாக பகல் நேரத்தில் ரெயில்களை ரத்து செய்கின்றனர். எத்தனை மாதத்துக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதை பொது மக்களுக்கு தெற்கு ரெயில்வே அறிவிக்க வேண்டும். இவர்கள் இஷ்டத்துக்கு ரெயில்களை ரத்து செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே பராமரிப்பு பணிகள் எவ்வளவு நடந்து உள்ளது? என்பதை மக்களுக்கு விளக்குவதுடன் இந்த பணிகள் இன்னும் எத்தனை மாதத்துக்கு நடைபெறும் என்பதையும் தெற்கு ரெயில்வே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News