என்னிடம் உண்மையான பாசம் காட்டும் திருமாவளவன் என் உறுதியான செயல்பாடுகளை அறிவார்- மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
- வழிநெடுக மக்கள் நின்று வரவேற்பளிப்பதை, இன்றைய அரசியல் களத்தில், ‘ரோடு ஷோ’ என்கிறார்கள்.
- தி.மு.க அரசின் திட்டங்களால் பயன் பெற்று வரும் மக்களின் திருவிழாக் கொண்டாட்டம்.
சென்னை:
தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களுக்கு சென்று வந்தது குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நவம்பர் 15-ந்தேதி காலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான அருமைச் சகோதரர் திருமாவளவன் அந்த விடுதியில் என்னை சந்தித்தார். அவருடைய பாராளுமன்றத் தொகுதிக்குள்தான் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. கடந்த ஆண்டு பெரம்பலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி, விரைவாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தபோதே, அந்த விழாவில் திருமாவளவன் எம்.பி. உரையாற்றும் போது, அரியலூர் மாவட்டத்திற்கும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார். அருமைச் சகோதரர் திருமாவளவனின் உள்ளத்தை நான் அறிவேன். மூத்த சகோதரராக என்னிடம் உண்மையான பாசம் காட்டும் திருமாவளவனும் என் உறுதியான செயல்பாடுகளை அறிவார். திராவிட மாடல் அரசிடம் அவர் வைத்த கோரிக்கை ஓராண்டுக்குள் நிறைவேறி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஆகியோர் அங்குள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து வந்திருந்தனர். அரியலூர் மாவட்டத்தில் பழைய நீதிமன்றக் கட்டிடங்களே இருப்பதால், புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். விடுதியில் விரைவாகச் சந்திப்புகளை முடித்துவிட்டு, ஜெயங்கொண்டம் அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வெளியே வந்தபோது, மழைத் தூறலுக்கிடையிலும் மக்கள் திரண்டு நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்பளித்தனர்.
காரில் இருந்தபடி கையசைத்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட நான், மக்கள் மழையில் நின்று வாழ்த்துவதைப் பார்த்ததும், கீழே இறங்கி நடந்து சென்று, அவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டேன். கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டேன். வழிநெடுக மக்கள் நின்று வரவேற்பளிப்பதை, இன்றைய அரசியல் களத்தில், 'ரோடு ஷோ' என்கிறார்கள். ஷோ என்றால் காட்சி எனப் பொருளாகும். நம்மைப் பொருத்தவரை, இது வெறும் காட்சியும் அல்ல, மக்கள் நமக்கு காட்சிப் பொருளுமல்ல. திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்குக் கிடைக்கின்ற மகத்தான வரவேற்பு. தி.மு.க அரசின் திட்டங்களால் பயன் பெற்று வரும் மக்களின் திருவிழாக் கொண்டாட்டம்.
இரு மாவட்ட அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளையும், கழகத்தின் ஆக்கப் பணிகளையும் நிறைவு செய்து, அரியலூர்-பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன். நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து உடன்பிறப்புகளாம் உங்களைக் கண்டு மகிழ்வேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.