குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிப்பு
- குற்றால அருவிகளிலும் நேற்று மாலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
- பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்தது.
தென்காசி:
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீரோடைகள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக கருதப்பட்டு வரும் குற்றால அருவிகளிலும் நேற்று மாலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் நடைப் பகுதிகள் மற்றும் கார் பார்க்கிங் வரையில் தண்ணீர் வழிந்து ஓடியது.
அதேபோன்று மெயின் அருவியிலும் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்தது. இதனால் கயிறுகளை கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்ததால் அங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று மாலை முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று காலையில் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்து நீர்வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள், அய்யப்ப பக்தர்களும் குளித்து மகிழ்ந்தனர்.
மெயின் அருவியில் மட்டும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.