வளர்ப்புக்காக வாங்கிய 8 ஆடுகள் பலியானதால் வியாபாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட ராணுவ வீரர்
- சந்தையில் ஆடு மாடுகள் விற்பனை கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
- வளர்ப்புக்காக வாங்கி சென்ற ஆடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை தமிழகத்தில் இரண்டாவது பெரிய வாரசந்தையாகும் இந்த சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படுவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் வந்து செல்லும் நிலையில் இந்த சந்தையில் ஆடு மாடுகள் விற்பனை கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் போச்சம்பள்ளி மற்றும் அதன் கிராமப்புறங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஆடு, கோழி வளர்ப்புத் தொழில் பிரதான தொழிலாக உள்ள நிலையில் வறட்சி காலங்களில் விவசாயம் பொய்த்து போனாலும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு கைகொடுக்கும்.
இவ்வாறாக வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளை சந்தைகளுக்கு விற்பனை செய்யப்படும் பொழுது அந்த ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ஆடுகளை கோவில் விழாக்களில் அசைவ விருந்துக்காகவும், ஆடுகளை வளர்ப்பதற்காகவும் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போச்சம்பள்ளி வார சந்தை தேடி ஆடுகளை வாங்க வந்து செல்கின்றனர்,
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரார் மணிகண்டன் (வயது35) என்பவர் ஆடுகளை வளர்க்க கடந்த வாரம் 20-க்கும் மேற்பட்ட கிடா ஆடுகளை சுமார் ரூ.2.38 லட்சம் கொடுத்து வாங்கி சென்றார். இதில் 8 ஆடுகள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்து விட்டது. அப்போது அந்த ஆடுகளின் வயிற்றில் மண் கரைசல் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மணிகண்டனுக்கு ஆடுகளை விற்ற கரகூர் பகுதியை சேர்ந்த வியாபாரிகளிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு வியாபாரிகள் சரிவர பதிலளிக்காமல் மிரட்டியுள்ளனர். இதனால் மணிகண்டன் அவரது உறவினருடன் போச்சம் பள்ளி வாரசந்தையில் இன்று வியாபாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடு வியாபாரிகளின் தொழில் போட்டியின் காரணமாக சிலர் ஆட்டின் வாயில் சேற்று தண்ணீரை கரைத்து வாயில் ஊற்றி அதன் எடையை அதிகரித்து காட்டுகின்றனர். சிலர் இந்த மோசமான செயலால் ஈடுபட்டு வருவதால் அப்பாவி பொதுமக்கள் மட்டுமே பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் செயல்படாமல் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
வளர்ப்புக்காக வாங்கி சென்ற ஆடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.