உள்ளூர் செய்திகள்

நெல்லை தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு

Published On 2024-11-17 07:51 GMT   |   Update On 2024-11-17 07:51 GMT
  • தியேட்டர் வளாகத்திற்குள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
  • மேலப்பாளையம் பகுதியில் உள்ள தெருக்கள் வழியாக தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் தியேட்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இரவு காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. இந்த தியேட்டரில் நேற்று முன்தினம் இரவு காட்சி முடிந்த பின்னர் ரசிகர்கள் வெளியேறிவிட்டனர். தியேட்டர் ஊழியர்கள் அங்கு பணியில் இருந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் 2 பேர் தியேட்டர் வளாகத்திற்குள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து மேலப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சி.சி.டி.வி. காட்சி மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியில் 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய காட்சிகள் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. நேற்று தியேட்டர் அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை தவிர சந்தை முக்கு ரவுண்டானா, குறிச்சி முக்கு செல்லும் மெயின் ரோட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களையும் தனிப்படையினர் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் அந்த நபர்கள் சென்ற காட்சிகள் இல்லை. அதேநேரம் பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் ஒரு வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த நிலையில், ஒருவர் மோட்டார் சைக்கிளை தயார் நிலையில் வைத்துக் கொண்டு நின்றுள்ளார். மற்ற 2 பேரும் பெட்ரோல் குண்டுகளை தியேட்டரில் வீசிவிட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த கும்பல் மெயின்ரோட்டின் வழியாக தப்பித்து சென்றால் சி.சி.டி.வி. கேமராக்களில் சிக்கி கொள்வோம் என்பதை அறிந்தே மேலப்பாளையம் பகுதியில் உள்ள தெருக்கள் வழியாக தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு வரை சுமார் 25-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து முடித்துள்ளனர். மெயின் சாலைகளில் அந்த கும்பல் வரவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் இன்று அந்த பகுதியில் உள்ள தெருக்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். ஏற்கனவே அமரன் திரைப்படம் வெளியானபோது அலங்கார் தியேட்டரிலும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால் தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் நேற்று நெல்லை வந்து முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று சம்பவம் நடந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த பிரிவின் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் இன்று 2-வது நாளாக தீவிரவாத அமைப்புகள் ஏதேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News